Tuesday, February 2, 2016

கைப்பைக்குள் இருந்ததை கவர்ந்து சென்றவள்

நானும் ஆசிரியர் என்றாள்
சினேகமாய் சிரித்து வைத்தேன்

தனியார் பள்ளிகள் சில வற்றின்
அராஜகங்களையும்
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
அன்பையும் அடுக்கினாள்
அதிகமான
அன்பை உணர்ந்தேன்

பையத்தான் என் பையைக் கேட்டாள்
நீ போய் வா என்றாள்
இயற்கை உபாதை தனித்து
இறங்கி வந்தேன்

கைப்பையில் இருந்ததை
பாதியைக் கவர்ந்திருந்தாள்
அவள் எடுத்தது தெரியாமல் இருக்கவே
பேருந்துகளின் திருட்டுகள் பற்றி
சிறு விளக்கம் கூடக் கொடுத்தாள்

நான் அப்படி சந்தித்ததில்லை என்றேன்
சந்திக்க வைத்து விட்டாள்

நல்லவேளை
சென்னை வந்தபின்
என் இருப்பிடம் போக
கொஞ்சம் சில்லறை வைத்திருந்தாள்

ஆனாலும் அவள் பாவம்
இருக்கும் இரண்டு வங்கி அட்டைகளில்
ஒன்றில்
சம்பளம் போக
மீதிக் கடனிருப்பதை
எப்படி சமாளிப்பாள்??

மற்றொன்றில் பத்திரிக்கைகள்
எப்போதேனும் போடும்
எளிய தொகையை வைத்து என்ன செய்வாள்??

பதிப்பகங்கள் நிராகரித்த
அந்த
கவிதைக் காகிதங்களை
பண்டமாற்று முறையில்
பஜ்ஜி வாங்கித் தின்பாளோ???


அறுந்து விழுந்து நான் சேகரித்து வைத்திருந்த
கொலுசு
ஏற்கனவே ஆறுமுறை பத்த வைத்த கதை
அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை
வட்டியைக்கூட கட்டவில்லை என
என்னை மிரட்டி அல்லது திட்டி
இரண்டு வங்கிகளிருந்து வந்த
கடிதங்களை என்ன செய்வாள்??

பிள்ளைகளின் படிப்பிற்கும்
தவணை முறையில் தான்
கட்டணம் செலுத்துகிறேன் என்பதறிந்து
எள்ளி நகையாடுவாளோ?

அடைக்க இயலாத
வீட்டுக்கடன் ரசீதுகள்
கட்டிய வீட்டையும்
கட்டாத கடனுக்கென
அடகு வைத்த ரசீதுகளை வைத்து
என்ன செய்யப் போகிறாள்???

என்
கம்பீரத் தோற்றமும்
கவர்ந்திழுக்கும் பேச்சும்
அவளையும் கவர்ந்திருக்கலாம்
ஆனால்
அதில் கடன் இருக்கும் என்பது
அவள் அறியாதது தானே???

மகளுக்கென
மருத்துவர் தந்த மருந்து சீட்டில்
பாதியை மட்டுமே வாங்கி
மருத்துவரையும், மருத்துவத்தையும் நான்
ஏமாற்றிய கதை தெரிந்து போயிருக்கும் தானே???

ஒவ்வொரு மாதமும்
வாங்க வேண்டும் என நினைத்து
நான் போட்ட பட்டியல்களில்
பலவற்றை பல மாதங்கலாய்
 வாங்காமலேயே
காலம் கடத்துவதைச் சொல்லும்
பட்டியல்கள் பார்த்து
என்ன நினைத்திருப்பாள்???

செத்துப் போன அப்பாவுக்கு
என்று நான் தொடங்கி எழுதியிருந்த
கடிதங்களைப் பார்த்து
பைத்தியக்காரி
என்று கூட நினைத்திருக்கலாம்

இதன் மூலம்
அவள் ஒன்றை அறிந்திருக்கலாம்
பெண்கள்
தூக்கிச்செல்லும் கைப்பையில்
காசுகளோடு
கவலைகளையும் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று

ஒன்றே ஒன்று நிச்சயம்
இவ்வளவு கடன்களையும்
தூக்கலான சில துயரங்களையும் தூக்கிக் கொண்டு
இவள் எப்படி உயிரோடு இருக்கிறாள்?
என்று யோசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது

இருந்த கொஞ்சப்பணம் அவளுக்கு
இரண்டு நாள்
அரிசிக்கும் மளிகைக்கும் பாலுக்கும் காய்கறிக்கும்
அவளுக்கு உதவி இருக்கக்கூடும்

அவள் வரையில்
என் மானம் போய் விட்டது
என்
கம்பீரம் பார்த்தவள்
இப்போது
கடன்களையும் பார்த்திருப்பாள்

ஆனால் அந்த அட்டைகள்
ஒரு நாளும்
அவளுக்கு உதவப்போவதில்லை

ஆனாலும்
அவளுக்கென் ஆழ்ந்த அனுதாபங்கள்

உடலும் முகமும்
பணக்காரத்தனம் காட்டியதால் தான்
வந்து பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டும்

அகத்தின் அழகு முகத்தில் தெரிந்த
அவளுக்கு
வாழ்க்கையின் கடன்கள்
வார்த்தைகளில் கூட இல்லை
என்பதை அவள் உணரவே இல்லை

அவளுக்கு என்
ஆழ்ந்த அனுதாபங்கள்..
அடுத்த முறை

உனக்கு
இன்னும் கொஞ்சம் அதிகமாய் வைக்க முயல்கிறேன்
அதுவரை
அதிகம் உள்ளவர்களிடம் திருடு
**************************************************************



10 comments:

  1. அருமை சகோ திருடியவளுக்கும்கூட இரக்கப்படும் தங்களின் மனம் அழகியதே... அருமை.

    ReplyDelete
  2. சுவாதி,

    கவிதை முழுவதையும் ரசித்துப் படித்துக்கொண்டே வரும்போது, கடைசி வரியில் அடுத்தமுறை 'அறிவுரை சொல்லும் காகிதங்களை வைப்பீர்களோ' என எதிர்பார்த்தபோது ?? ... அவ்வ்வ்வ் .... அதிகம் உள்ளவர்களில் உழைத்து சம்பாதித்தவர்களும் இருக்கலாமே !

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லை..அது போனால் சமாளிக்கலாம் என்று இருக்கும் போது சமாளிக்கலாம் தானே???அவளால் சமாளிக்க இயலாமல் தானே திருடுகிறாள்...நான் அந்த கோணத்தில் பார்த்தேன் சித்ரா அவர்களே

      Delete
  3. அவளுக்காக பரிதாபப்படுவது தான் நிஜமான பணக்காரத்தனம் சுவாதிமா!
    கவலைப்படாதீர்கள் நம்மிடமிருந்து ஒன்று போனால் அவை பல மடங்காகி திரும்பி வரும் என நம்பிக்கையோடிருங்கள்,

    வங்கி அட்டைகளை கேன்சல் செய்து வீட்டீர்கள் தானே?

    மொத்தமாக படித்து மனம் கந்த்து போனேன், உங்கள் எழுத்தில் இருக்கும் சோகம் படிப்பவர் மனதை தொட்டு செல்லும்!

    என்
    கம்பீரத் தோற்றமும்
    கவர்ந்திழுக்கும் பேச்சும்
    அவளையும் கவர்ந்திருக்கலாம்
    ஆனால்
    அதில் கடன் இருக்கும் என்பது
    அவள் அறியாதது தானே???

    அறிந்திருக்க மாட்டாள் தான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிஷாந்தி அவர்களே

      Delete
  4. அதிகம் உள்ளவர்களிடம் திருடு...அதிகம் ரசித்த வரிகள்.

    ReplyDelete
  5. நல்லவேளை
    சென்னை வந்தபின்
    என் இருப்பிடம் போக
    கொஞ்சம் சில்லறை வைத்திருந்தாள்


    பெரிய மனசுதான்

    ReplyDelete
    Replies
    1. அதுவும் இல்லை என்றால் நான் கால்நடையில் எப்போது வேளச்சேரி வருவது???அந்த வரையில் அவளுக்கு வாழ்த்து தான்

      Delete