Tuesday, December 8, 2015

இது கட்டுரை அல்ல....கண்ணீர்

* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து விட்டு போகவும் என்று கத்திக் கொண்டே தான் சென்றனர்.

* அவர்களே மிகத் துரிதமாகத்தான் கத்திக்கொண்டு சென்றனர். தீபாவளியை ஒட்டி வந்த மழையில் எல்லோர் வீட்டிலும் மூன்றடித் தண்ணீர்.எனவே, காவல் துறையினர் அறிவிப்பு செய்தும் சில பொருட்களைப் பரணில் பத்திரப்படுத்தி விட்டு படுக்கச் சென்று விட்டனர். அறிவிப்பு செய்த போது மணி 11.30..மூன்று நாட்களாய் ஒரு விநாடி கூட நிற்காத மழை. சாலையில் முழங்கால் அளவுக்குத் தான் தண்ணீர்.

அரைமணி நேரத்தில் மழை கட்டிலைத் தாண்ட சில குடும்பங்களில் லாப்டில் ஏறி அமர்ந்துள்ளனர். ஆனால் அடுத்த இருபது நிமிடத்தில் மேற்கூரையைத் தாண்டி விட்டது நீர்.வெளியேயும் வர இயலாமல் அப்படியே சில குடும்பங்களோடு இறந்து கிடந்தது எல்லோர் மனதையும் குலைத்தது.

புதிதாய் மராமத்து பணி செய்யப்பட்ட வீடு. தன் சேமநலநிதிக் கணக்கு மற்றும் வீட்டுக்கடன் பெற்று கட்டிய வீடு 20 ஆண்டுக்கடனில் 5 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருக்க , கட்டுமானப் பணியில் என்ன கோளாறு என்று அறியாமலேயே குடும்பத்தோடு இடித்துத் தள்ளிக் கொண்டே போய்விட்டது.

அறிவிப்பு  வந்த நேரத்தில் ஒரு சில கடைகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ( இரவு 2 மணிக்குப் போனாலும் எல்லா சாலைகளிலும் வாகனங்களும் மனிதர்களும் நகர்ந்த வண்ணமிருப்பர்.) முன்பே மழை மூன்றடிக்கு வந்து போயிருந்ததால் அவர்கள் இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

சர சர வென்று நீர்மட்டம் ஒரு பேய் வேகத்தில் உயர, திறந்திருந்த கடைகள் மட்டுமல்ல சாலைகளில் பயணித்தோர் அனைவரும் நீரோடு போராட முடியாமல், போய்ச் சேர்ந்தனர்.

இருசக்கரவாகனங்கள், கார்கள், லாரிகள், வேன்கள், பஸ்கள், என்று அனைத்து வகை வாகனங்களும் உருட்டிக் கிடந்தது.

சைதாப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு கணினியாளர் அன்று வேலை இருந்ததால் திடீரென்று அறிவிப்பும் அதைத் தொடர்ந்து கூச்சல், எல்லாம் கேட்க மாடியில் நின்று பார்த்தவர் உறைந்து போயிருக்கிறார். தன் கண்ணால் மரணங்களின் தொகுப்பைப் பார்த்து இன்னும் எந்த மிரள்வில் இருந்து மீளாமல் காணப்படுகிறார்.

மாணவர்களுக்கு தண்ணீரின் அடர்த்தி பற்றி வேகம் பற்றி கற்பிக்க ஒரு பவுடர் டப்பாவில் மூன்று துளையிட்டு அதில் அடியில் இருக்கும் துளையில் தண்ணீர் அதிகமாக வருவதைச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வகுப்பெல்லாம் தண்ணீராக்க்கி, ஆயாம்மாவிடம் கொஞ்சம் முனகல் பெற்று, ஆனாலும் விடாமல் அவர்களை தண்ணீர் ஊற்ற சொல்லிகிறேன் என்று நானே ஊற்றி ஊற்றி விளையாடி இருக்கிறேன். நீரின் வேகமும் அடர்த்தியும் இவ்வளவே நான் அறிந்தது. ஆனால் இழுத்துக் கொண்டு போன பலரை நேரில் பார்த்ததும் இன்னும் ரீங்கரிக்கிறது பயத்தின் அலறலும், உயிரின் பீதியும், கடைசியாய்க் கத்திய மரணவலியும்.

மண்டபங்களில், பள்ளிகளில், பாதுகாப்பில் உள்ளோர் எண்ணிக்கையும் மரணத்தைத் தழுவியோர் எண்ணிக்கையும் குறைவாகத்தான் வெளியிடப்படுகிறது. ஏனெனில் உண்மைக் கணக்கு யாருக்குத் தெரியும்,,(அந்தந்த பகுதியில் பார்த்தவர்கள் தான் சாட்சி)

இடுப்பு அளவையும் தாண்டி தண்ணீர் உள்ளே வந்ததால் இனி ஆபத்து நேரலாம் என்று உணர்ந்த ஒரு சகோதரி, தன் மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு(மூன்றாம் வகுப்பு) மற்றொரு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் சற்று பெரியவள் என்பதால் தனியே நடக்கவிட்டுக் கூட்டி வர தன் மகள் தண்ணீருக்குள் கரைவதைப் பார்த்த பின்னும் தன் மகளை இழுக்கப் போனால் கையில் இருக்கும் குழந்தையும் சிறுவனையும் கூட இழக்க நேரிடும் என்று உணர்ந்து இவர்களைக் காப்பாற்றி விட்டு தன் மகளின் சடலமாவது கிடைக்குமா என்று என்று கதறிய காட்சியைப் பார்த்த போது என் இதயம் சுக்கு நூறாகி வெடிக்கும் ஓசையை நானே கேட்டேன்,

அறிவிப்பு வந்தபின் சாப்பிட்டு விட்டு நிதானமாக கிளம்ப கொஞ்சம் துணிகள், உணவுப் பொருளுடன் கிளம்பிய குடும்பம் மொத்தமும் அடித்துச் செல்லப்பட்டனர்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் சுற்றிலும் நீர் என்பதால் வெளியே வர இயலவில்லை. மின்சாரம் இல்லை. எனவே சுற்றி தண்ணீர் இருந்தும் குடிக்கத் தண்ணீர் இல்லை.

கழிப்பறை வசதி இல்லாததால் உணவு உண்டால் தான் அந்தத் தொல்லை என்றே உணவே எடுத்துக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சித்தோம்

ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்து சாப்பிடு என்று சொன்னது போக , கொஞ்சம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய் மா என்று சொல்ல ஆரம்பித்தோம்.

திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் தான். ஆனால் ஆறு நாட்களும் நரகவேதனையில் 600 ஆண்டுகள் போல் நீண்டது

முதல் தளத்தில் இருப்போர் கீழ்த்தளம் வரைதான் தண்ணீர் வரும் என்றும் மேலே வரை எட்ட வாய்ப்பே இல்லை என்று எண்ணிய எண்ணத்தில் விழுந்தது நீர்

மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் நான்காம் நாள் மின்சாரம் வந்து விடக்கூடாது என்றே பயந்தோம். வந்தால், பூட்டப்பட்ட வீடுகளின் வழியாகவும் நீரால் சூழப்பட்டு உள்ளேயே இறந்து கிடந்தோரின் வீட்டின் மூலமாகவும் பல பகுதிகளில் மின்சாரம் வந்தால் தண்ணீர் வெளியேறாத நிலையில் தாக்கப்படுவோம் என்றே பயந்தோம். அதற்கு இருட்டு வாழ்வே தேவலாம் என்று தோன்றியது.(திங்கள் முதல் சனி வரை மின் இணைப்பும் வழங்கப்படவில்லை)

கீழ்தளத்தில் சிலர் வண்டியை வைத்துப் பூட்டி சென்றிருந்தாலும் அது அடித்துச் செல்லப்பட்டு எங்கு போனதென்ற சுவடே தெரியவில்லை.

அடித்து வரப்பட்ட இருசக்கர வாகனங்கள் பல இடங்களில் தேங்கிக் கிடந்தன. ஆனால், அவைகளை சுமந்தவர்களை,??

வீட்டுக்குள் சுழற்றி அடித்த்  தண்ணீர் அதுவாகவே பீரோவைத் திறக்க வைத்து, மிக்ஸி, கிரைண்டர், அடுப்பு சிலிண்டர், வாஷிங் மிசின்,பிரிட்ஜ் என்று அனைத்துப் போருட்களையும் சேதப்படுத்தி அல்லது அதனையும் அடித்துச் சென்றிருந்தது.

நான்கு நாட்கள் கழித்து வீடு பார்க்கும் போது மாநாகராட்சிக் கழிப்பரையைவிட அலங்கோலமாகக் கிடந்தது.

இன்னும் மேல் மாடி வரை எட்டியத் தண்ணீரின் அதிசயத்தை பே

சிப் பேசி மாளவில்லை. மேல் தளத்திலும் 5 அடிக்குத் தண்ணீர்

சுதாரித்தோர், மொட்டை மாடிக்கு சென்று நடுங்கும் குளிரில், மழையில் நனைந்து கொண்டே இருந்ததால் மொட்டை மாடிகளிலும் பிணங்களின் குவியல்கள்

சர சரவென இடிந்த வீடுகளை வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே வந்த நிமிடத்தில் தண்ணீரால் இழுக்கடிக்கப்பட்டு மரணித்தனர்

சென்னையின் பிரதான் சாலைகள் அனைத்திலும் தண்ணீர்..( அளவின் விகிதம் தான் கூடியதும் குறைவானதாகவும் இருந்ததே யன்றி எங்கும் நீரால் சூழ்ந்தது உலகு

தீபாவளியை ஒட்டி வந்த மழையில் இடுப்பளவு மட்டுமே வீட்டுக்குள் புகுந்த்தால், பலர் வீட்டைவிட்டு போகாததாலும் இறந்தனர்

கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய் மாற்றி வாடகை பெற்ற சென்னை இன்று மொத்தமாகவே கழிப்பறை ஆனது

சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே பிளவு பட்டு கார் முங்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டதால் மறுநாள் வந்த கார்கள் மூழ்க சில சாலைகள் மூடப்பட்டு போக்குவ்ரத்தை தடை செய்து உத்தரவு போட்டிருந்தனர்.

சென்னையின் மழை தாக்கத்தை மீம்ஸ் ஆக்கி மகிழ்ந்தோருக்கு உணமையில் மழையின் இறப்பு சதவீதமும் இழப்பு சதவீதமும் தெரியவில்லை

எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர்தான். தனது ஊதியத்தில் வாங்கிய பொருட்கள் தான் அவ்வளவும். இனி அடுப்பிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் ஆரம்பிக்க வேண்டும். பாத்திரங்கள், சமையல் பொருட்கள், படுக்க, இருக்க என்று ஒவ்வொரு பொருளும் இனி வாங்கிச் சேர்த்துவிடலாம். ஆனால் இந்த மனபாரத்தைத் தான் எப்படித் தாங்குவது எனத் தெரியவில்லை

அப்பா, அம்மாவை விட்டு இங்கே வேலை பார்த்தவர்கள், மனிவியை விட்டுப் பிரிந்து இருப்போர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பிரிந்து வந்தோர் தான் பெரும்பாலும். ஆனால் யாரும் யாருடனும் தொடர்பு கொள்ள இயலாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற தகவலுக்குக் கூட தொலைபேசிக்கு மின்சாரம் இல்லை. நெட்வொர்க்கும் இல்லை.

வெளியூரிலிருந்து பால் பிஸ்கட், பிரட் போன்ற பொருட்கள் மக்கள் தங்கியிருந்த  பள்ளிகள், மண்டபங்களை எட்டினாலும் பாதிப்பே இல்லாதோர் தான் முண்டி அடித்துக் கொண்டு வாங்கினர்.

இதிலும் வியாபாரம் பார்க்க நினைத்த சிலர் அந்தப் பொருட்களையும் வாங்கி விற்றனர்.

ஒண்ணாம் தேதியே மழை பெய்ததால் ஊதியத்தை ஏடிஎம் லிருந்து நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்த பணத்தையும் செலவு செய்து விட பாங்குகளில் எல்லாம் தண்ணீர் சூழ எந்த வங்கிகளும் இயங்கவில்லை. ஏடிஎம்மில் பணமும் எடுக்க இயலவில்லை. இதனால் அட்டைகளில் பணம் இருந்தும் எடுக்க இயலாத கொடுமையும் நேர்ந்தது

இரவு இரண்டு மணியானாலும் காலை நான்கு மணியானாலும் போக்குவரத்து வாகனங்களாலும் மக்களாலும் தூங்காமல் விழித்திருக்கும் சென்னையில் அனைத்துக் கடைகளும் மூடியே கிடந்தன. வியாபாரிகள் பாடு கொண்டாட்டமாகவும் மக்கள் பாடு திண்டாட்டமாகவும் இருந்தது

எங்கும் போக இயலவில்லை. எல்லாவற்றுக்கும் விலை வைத்தார்கள்.

பால் 200 கத்தரி 200 மற்ற பொருட்கள் அதன் மடங்குகளில்

சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் குறைந்ததும் நாங்கள் கேட்ட ஒலி எல்லாம் ஹெலிக்காப்டர் சத்தமும், ஆம்புலன்ஸ் சத்தமும்

வேளச்சேரி பகுதியின் ஹவுசிங் யூனிட், கல்கி நகர், ராஜலட்சுமி நகர், விஜய நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, தண்டீஸ்வரம் நகர் தான் மற்ற பகுதிகளை விட பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது

அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் இரண்டு நிமிட நடையில் எட்டும் தூரம் எல்லாம் 6 மணி நேரம் பிடித்தது. வெளியில் போனால் உயிரோடு மீண்டும் வீட்டுக்குள் வருவோம் என்ற உத்திரவாதமே இல்லை

மண்டபத்தில் உணவு வழங்குகிறோம் என்ற போர்வையில் பெண்கள் கையைத் தடவி, வருடி, உணவு வழங்கிக் கொண்டது சில மனித மிருகங்கள்

சில இடங்களில் தங்கும் போது மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர்

வெளியூரிலிருந்து வந்த பொருட்களை வியாபாரிகள் பிடிங்கி விலை வைத்து விற்றனர்.

பிஸ்கட், பால், பிரட் என்று என்ன பொருட்கள் வழங்கினாலும் போட்டோ எடுத்துக் கொண்டனர் கொடுத்தவர்கள், அதில் அழகாய் இருப்பவர்கள் புறக்கனிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோக எஃபக்ட் பத்தலையாம்

பலரின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளிருப்போர்களை மீட்ட கொடுமையும் நடந்தது.

அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பாதாள சாக்கடைகள் மூடி தானே திறக்கப்பட்டு இரண்டும் ஒன்றாகக் கலந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது

இவ்வளவு அழிவுகளைத் தந்த நீர் தனக்காக காவுகளை எடுத்துக் கொண்ட நேரம் அரை மணி நேரம் தான்

முதல் நாள் முதல் தளம் வரை எட்டிய நீர் இரண்டு நாட்கள் கழித்து தான் சாலையில் இடுப்பளவில் நடக்கும் அளவில் குறைந்தது

சாலையோரங்களில் மிக உயர்ந்த மரஙகளில் எல்லாம் முதல் நாள் அடித்துக் கொண்டு போன பாலிதீன்கவர்கள் தொங்கியது

ஒரு மனநல்ம் குன்றியோர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், டோனர்கள் கொடுத்த பணம், மளிகைப் பொருட்கள், அக்குழந்தைகளுக்குப் பயன்படுத்தப் பட்ட வேன் எல்லாம் எல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்தது

எல்லோருடைய வீட்டிலும் பள்ளிப் புத்தகங்கள் நீரோடு போய் விட்டது

இப்போது எங்கள் வீடுகளில் அடுப்பு,  மற்ற் சமையல் உதவி சாதனங்கள், மளிகைப் பொருட்கள் என்று எதுவும் இல்லை

இதில் நான் குறிப்பிட்டுருப்பது 0.000000000001 சதவீதம் கூட முழுமையாய் சொல்லவில்லை.

இன்னமும் மழைநீர் சூழ்ந்து வீடுகள் நிறைய இருக்கின்றன். உணவு பால் பொருட்கள் இல்லாமல் மின் இணைப்பும் இல்லாமல் என்ன செய்ய இயலும்?

இன்னும் முழுமையாக நீர் வடியாததால் எங்கே ம்ன் கம்பிகள் ஷாக் அடிக்குமோ என்று பயந்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் விடப்படுகிறது

இன்னும் பெரும்பான்மையான் கடைகள் திறக்கப்படவில்லை. காரணம் உள்ளே இருந்த பொருட்கள் இனி விற்பனைக்குகந்தவையாக இருக்காது

இப்போது பலரின் மனது உதவியை விட ஆறுதலைத்தான் எதிர் பார்கிறது

அன்பான வார்த்தைகளால் இழந்த பொருட்களை மீட்டெடுப்போம் என்று நான் நம்புகிறேன்

ஆனால் உயிர்கள்???

அதே போல் இதைச் சாக்கிட்டு பெண்களைத் தவறான முறையில் அணுகியோர்கள் அழுகிச் சாக வேண்டும் என்று சாபமிட்டாலும் இறைவா அவர்களுக்கு நல்ல மனதைத் தா என்று வேண்டுகிறேன்

இனி வரும் ஊதியத்தில் ஒவ்வொன்றாய் வாங்கலாம். பிறக்கும் போதே எல்லாம் கொண்டா வந்தோம்??????







41 comments:

  1. என்னம்மா இப்படி அதிர வைத்துவிட்டீர்களே இந்த பதிவின் மூலம்.படிக்கும் எங்களுக்கே மனம் குலைந்து போனது என்றால் நேரில் பார்த்து அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என நினைக்கையில்......அதை எப்படி வார்த்தையால் சொல்லுவது என்று தெரியவில்லையம்மா....


    இவ்வளவு நடந்தும் தமிழகத்தில் ஒன்றுமே நிகழவில்லை என்று ஆட்சி செய்யும் அம்மையாரை என்னவென்று சொல்லுவது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...எனக்கு இருந்த அதிர்வில் பதில் அளிக்க வில்லை மன்னியுங்கள்...மேலும் இன்னும் மின்சாரம் முழுதுமாய் வழங்கப்படவில்லை..நன்றி

      Delete
  2. முடியல்லபா!இதை படித்து அழுகின்றேன்!இத்தனை துயரிலும் வக்கிரமனங்களின் கயமைத்தனம் கண்டு மனம் பொங்கி எழுகின்றது. இவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து சுடணும்.

    வாகனத்ஹில் அறிவிப்புசெய்தவர்கள் எங்கே செல்ல வேண்டுமென அறிவிக்க இல்லையோ? ஆனாலும் மக்களும் கொஞ்சம் கவனித்தி அவர்கள் சொன்னதை கேட்டிருக்கலாமேன்னு இப்ப கேட்டு என்னப்பா பயன். போனதெல்லாம் போனதே!

    உங்களுடன் நாங்களிருக்கின்றோம்.தைரியமாக இருங்கள்.
    மீண்டு வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிஷா...முகநூலில் என்ன பெயரில் இருக்கிறீர்கள்...நான் தமிழில் செ.சுவாதி என்று இருப்பேன். என் டைம்லைனில் பதிவு செய்யுங்களேன்.மகிழ்வேன்..(ஆனால் பல ஆண்கள் தான் உதவினார்கள்...அவர்களால் தான் இன்று ஓரளவு ஊர் ஊராய் இருக்கிறது.இல்லையெனில் சுடுகாடு தான்...)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. வேதனை நாம் இயற்கையின் இந்த சவாலை சமாளிப்போம் . அனுபவங்களிலிருந்து பாடம் படிப்பதுதானே மணிதர் செய்யக்கூடிய செயலாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா..வாங்கும் போது இது அரசாங்க நிலமா அல்லது இயற்கையின் நிலமா என்று பார்த்து வாங்கியிருந்தால் இவ்வளவு வந்திருக்காது..நன்றி தங்கள் வருகைக்கும் இந்தக் கருத்து இடுகைக்கும்

      Delete
  4. என் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளேன்.
    நன்றி

    ReplyDelete
  5. கொடுமை.
    //மரணத்தைத் தழுவியோர் எண்ணிக்கையும் குறைவாகத்தான் வெளியிடப்படுகிறது.//
    தெரிந்ததே. இறந்தவர் உடல் அயல்நாடு இலங்கைக்கே மிதந்து சென்றுள்ளது என்றால் இறந்தவர்கள் பெருமளவில் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பெருமளவில் கண்டு பிடிக்க இயலவில்லை..நடந்து சென்றோர்..அந்நேரத்தில் பயணம் செய்தோர்..எல்லாம் காலி...கணக்கெடுப்பில் தான் தெரிய வரும்

      Delete
  6. ஒவ்வொரு எழுத்தும் மனதை கனக்கச் செய்கின்றன
    தாங்களும் தங்கள் மகள்களும் நலம் என்பதை அறிந்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
    கவனமாய் இருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மறுபிறப்பு..சகோதரரே....ஃபீனிக்ஸ்....ஆகிவிட்டோம்

      Delete
  7. ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்து சாப்பிடு என்று சொன்னது போக , கொஞ்சம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய் மா என்று சொல்ல ஆரம்பித்தோம்.///

    ReplyDelete
    Replies
    1. கழிப்பறை வசதி இல்லாததால்,,வேறு வழியின்றி,அப்படி சொல்லப்பட்டது(அப்படித்தான் இருந்தோம்)

      Delete
  8. நீண்ட நாளைக்குப் பிறகு உணர்ச்சிகரமான -உருப்படியாக- ஒரு கட்டுரை
    மழைக்கு நன்றியுடன் த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வருக...வருக...வருக...வணக்கம்..மின் இணைப்பு இன்னும் சரியாக வழங்கப்படவில்லை அய்யா...மேலும் அதிர்வாக வே இருக்கிறேன்...அதெல்லாம் மீண்டு விடுவேன்...ஆனால் இப்போது, கொஞ்சம்...மன்னியுங்கள் அய்யா,...

      Delete
  9. இயற்கையின் சீற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
    இவ்வளவு பெரிய பேரிடரினின்று நீங்கள் தப்பியது அதிசயம்தான். உங்கள் பதிவு படிக்கப் படிக்க மனதை நெகிழ வைத்து விட்டது. என்ன நடந்தது என்பதின் மறுபக்கத்தையும் சொல்லி இருக்கிறீர்கள்.


    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறி இருக்கும் போது இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் அய்யா..உதாசீனத்தால் இவ்வளவு கொடுமைகள் நடந்தேறின

      Delete
  10. “தமிழ்மணம்“ திரட்டியில் இன்று அதிகம்பேர் படித்த் கட்டுரை என்று முதலிடத்தில் உஙகளின் இந்தக் கட்டுரை வந்திருக்கிறது. நீங்கள் பதிவு தொடங்கியதிலிருந்து தமிழ்மணம் திரட்டியில் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். உண்மைக்கு இன்றும் மதிப்பிருக்கிறது. தொடர்ந்து உண்மைகளை எளிமையாகவும் இன்னும் கூர்மையாகவும் பொருத்தமான படங்களுடனும் எழுதிச் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா..ஆமாம்.நானே பல புகைப்படங்கள் எடுத்தேன்..ஆனால் அப்படி வந்த அன்று முழுதுமாக மின் இணைப்பு இல்லாமையால் மேலும் புகைப்படங்கள் எடுக்க இயலவில்லை...பக்கத்து வீட்டு நண்பர் ஒரு வீடியோ எடுத்தார். அதைப்பார்த்தால், ரத்தம் உறைந்து விடும்.தயவு செய்து அதனை அழித்துப் போடுங்கள் என்றேன்.

      Delete
  11. உங்களது இந்த பதிவுக்கான குறிச்சொற்களில் (Labels) அனுபவங்கள் என்பதனோடு – சென்னை,புயல்,மழை,வெள்ளம் என்பவற்றையும் குறித்தால் இன்னும் நிறையபேர் பதிவினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா. தங்கள் வரவிற்கு நன்றி அய்யா..அப்படியே மாற்றி விட்டேன்..நன்றி.

      Delete
  12. //மண்டபத்தில் உணவு வழங்குகிறோம் என்ற போர்வையில் பெண்கள் கையைத் தடவி, வருடி, உணவு வழங்கிக் கொண்டது சில மனித மிருகங்கள்

    சில இடங்களில் தங்கும் போது மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர்//
    இந்த அவலத்திலுமா?
    தாயே! நானும் ஆண் எனச் சொல்ல வெட்கமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் அப்படி இல்லை சகோதரரே..என்ன செய்வது? அதிலும் கொஞ்சம் அழகாய் இருந்தால் அவர்கள் புகைப்படம் எடுக்கப் பிரியப்படவில்லை. மேலும், சோகமாக இருந்தால் தான் புகைப்படம் பார்ப்பவர்கள் பரிதாபப்படுவர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் சிலர் ஆத்மார்த்தமாக உதவினர். அவர்களும் ஆண்கள் தானே..இளைஞர்கள் தான் அய்யா.அவ்வளவு உதவிகள்..எல்லோருக்கும் என் சல்யூட்

      Delete
  13. படித்து முடியும் பொழுது எனது கண்கள் குளமாயிருந்தன சகோ வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம் ஆறுதால் சொல்ல....
    த+ம 3

    ReplyDelete
    Replies
    1. மேல் மாடியிலிருந்தும் தண்ணீர் வந்தது கில்லர்ஜி..அதோடு 19 மணிநேரம் மாடியில் மழையில் நிற்க வேண்டி வந்தது..அது தான் மிகப்பெரிய கொடுமை. உட்காரவும் முடியாது. தூங்கவும் முடியாது..மழை பெய்து கொண்டே இருந்தது. தண்ணீர், சாப்பாடு, தூக்கம் ஏதுமில்லை..அதன் பின்னரும் சனிக்கிழமை வரை வெறும் தண்ணீர் மட்டும் தான் உணவு

      Delete
    2. மனதை கனக்க வைக்கும் நிஜம்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  14. வந்தோர்..வருவோர் அனைவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்

    ReplyDelete
  15. Unmaiyakave rathakanner vadikkiren. Sollavonna thuyaram. Aruthal solla varthai yethu? Meentum titanic Partha anupavam. Varutam.varutam. Kanneer.............

    ReplyDelete
    Replies
    1. அன்பில் நெகிழ்கிறேன்..நன்றி

      Delete
  16. Padikka padikka kanneer viliyoram vadikirathu. Thankal sonnathupol nenjai udaiyavaitathu. Yarukkum inimel ipadi varakudathu. Mika Mika varutam. Intru nit thalayanai muluvathum nanaiyum. Kanneer..............

    ReplyDelete
    Replies
    1. சொல்வதென்றே தெரியவில்லை.அங்கும் நெகிழும் போது இங்கு மகிழ்கிறது...பிரியங்களால் நிறைந்த உலகம்..பிரியங்களை நேசிக்கும் உலகம்..நானும் தான்

      Delete
  17. கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய் மாற்றி வாடகை பெற்ற சென்னை இன்று மொத்தமாகவே கழிப்பறை ஆனது//

    கடவுளே....என்ன ஸ்வாதி இது. பயங்கரமாக இருக்கின்றதே. அப்படி என்றால் பேப்பரில் வந்தவை குறைவுதான் போல...நீங்கள் சொல்லியிருப்பது என்னப்பா இது அதிர்ச்சியாக இருக்கிறது. நானும் உங்கள் பகுதிக்கு அருகில்தான் இருக்கின்றேன். நீங்கள் இங்கு வேளச்சேரி என்பதை இப்போதுதான் அறிகின்றேன். தெரிந்திருந்தால் உங்களையும் சின்னவளையும் பெரியவளையும் எங்கள் வீட்ட்ற்கு அழைத்து வந்திருப்பேனே. கடவுளே எனக்குத் தெரியாமல் போனது மட்டுமல்ல அந்தச் சமயத்தில் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. 4 நாட்கள் மின்சாரம் இல்லை. வீட்டிற்குள்ளும் குடிக்கவோ, கழிவறைக்குக் கூடத் தண்ணீர் இல்லை. கீழே சென்று அடி பம்பிப் அடித்து எடுத்து வந்தோம். ஆனால் அது சிரமமே இல்லை உங்களை எல்லாம் பார்க்கும் போது இந்தச்சமயத்திலும் நாங்கள் சொகுசாகத்தான் இருந்திருக்கின்றோம். எங்கள் பகுதியில் தண்ணீர் சூழவில்லை. அதாவது தரமணியின் டைடல் பார்க் பகுதியில் இருக்கும் தரமணிப்பகுதி. வேளச்சேரியை ஒட்டிய பகுதியில் தண்ணீர் தேங்கியது. அரசுதான் முழுப்பொறுப்பு இதற்குக் காரணம். இத்தனை உயிர்களைப் பலிவாங்கியதற்கு.சென்னையில் இருக்கும் நீர்நிலைகளை ஒழுங்காத இணைத்திருந்தால் இந்த வெள்ளம் வந்திருக்க வாய்ப்பே இல்லை. குறிப்பாக பக்கின்காம் கால்வாய். எங்கள் வீட்டருகில் இருக்கு ஆனால் இல்லை. அதைப்பற்றித்தான் எழுதுகின்றேன். நீங்கள் இருக்கும் பகுதி எது? எனது அலைபேசி நேற்றிலிருந்துதான் ஒழுங்காக வேலை செய்கின்றது. தண்ணீர் வடிந்துவிட்டதா? எனது அலைபேசி எண் 9940094630

    சுவாதி இது கீதா. நாம் ஒரே ஒரு முறை சந்தித்திருக்கின்றோம். முத்துநிலவன் அண்ணா பதிவர் விழாவிற்காக சென்னை வந்த போது நீங்கள் டிஸ்கவரி சானலுக்கு வந்தீர்கள் அங்கு.

    வாசித்ததும் மனது என்னவோ ஆகிவிட்டது ஸ்வாதி...

    நான் இருப்பது தரமணி டைடல் பார்க்கின் பின்பகுதி. ஐஐடி ஒட்டி.

    ReplyDelete
    Replies
    1. ஆம்...எனக்கும் இப்போது தான் நினைவிற்கு வருகிறது.தங்கள் வருகைக்கு நன்றி...யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. மேலும் என் உறவினர் வீடு அருகில் தான் அங்கும் போக இயலவில்லை. பிள்ளைகள் எங்கும் வர மறுத்து விட்டனர்.(எனக்கே பயம் தான் காரணம்)

      Delete
    2. இன்னும் எனக்கு சென்னை அறிமுகம் இல்லாததால் உங்கள் இருப்பிடம் அறிய இயலவில்லை. (பாலத்தின் அடியே ,உடல்களாய்க் கிடந்ததைப் பார்த்து விட்டேன்..நீங்கள் வந்தீர்களா???)

      Delete
  18. நீண்ட நாட்களுக்கு பிறகு அழுதேன்.. தேம்பி தேம்பி.. அந்த தாயையும் அவளின் ராசாத்தியையும் நினைத்து.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி விசு சார்..ராசாத்திகள் இப்போது பூரண நலம்...(புலிக்குப் பிறந்தவர்கள்...புலி யார் என்று நினைத்தீர்கள்? நானே தான்..ஹிஹி

      Delete
  19. Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி அய்யா...அன்றைய தினங்களின் வலிகள்...சற்று அதிகம் தான்..ஆனால் என்னைப் போன்றோர் சற்று இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு விட்டோம்...மீண்டு தானே ஆக வேண்டும்

      Delete