தாவர உணவும் ஒரு கனவும்... எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
வகை 2
நாங்கள் புதுகையில் இருந்த போது நடந்தது இது. எங்கள் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி இருந்த வீட்டில் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அதனைக் கவனமாக கண்ணுற்ற ஒரு மிகப் பெரும் நல்லவர் ஒருவர் உங்கள் வீட்டு வாசலில் வேப்பமரம் இருக்கு. அதனால் தான் அடிக்கடி சண்டை வருது. பெண்கள் ஒதுங்கும் நாளிலும் நீங்கள் அங்கே இருக்கீங்க.அது அது மாரியம்மனின் அடையாளம். நீங்கள் பாவம் பண்ணிக் கொண்டு இருக்கீறீர்கள் என்று சொல்ல மறுநாள் அந்த மாரியம்மன் எனப்பட்ட வேப்ப மரம் வெட்டப் பட்டது. யாரும் மாரியம்மனை எப்படி வெட்டலாம் இது அதை விட பாவம் என்று சொல்லித் தரவில்லை பாவம்.
((அவர்கள் வீட்டில் அதன் பின்னும் சண்டை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது))
அவர்கள் வெட்டிய உடன் அதற்கும் பக்கத்துக்கும் பக்கத்தில் இருந்த அம்மா, மரம் வெட்டும் காரணம் கேட்க, மீண்டும் ”பாவம்” செய்த கதைகள் சொல்லப்பட அவர்கள் வீட்டு வாசலில் இருந்த மரமும் வெட்டப்பட்டது.
இப்படியாக பாவக் கதைகள் பெரியார் நகர் எங்கிலும் சுற்ற ஆங்காங்கே மரம் வெட்டு படலம் அழகாகவும் நிதானமாகவும் நடந்து முடிந்தது.
பெரும் பாலும் எல்லோர் வீடுகளிலும் சுற்று சுவர் வைத்து சிறிய பகுதிக்கு வீடு கட்டி விட்டு மீதிப் பகுதிக்கு செடிகள் வைத்திருப்பர். இவர்கள் தாவர விரும்பிகள் போல் தங்களைக் காண்பித்துக் கொண்டாலும் உண்மையில் அவ்வளவுக்குத் தான் லோன் கிடைத்திருக்கும் என்பதே மறைக்கப்பட்ட வரலாறு. (((( இவர்கள் செடி வளர்க வேண்டும் என்பதற்காகவே கடன்கள் கட்டுக்குள் இருக்கும் படியான சாபத்தை கடவுள் அருள்வாராக..(இருந்தால்))))
எங்கள் சொந்த வீடு இருக்கும் மருது பாண்டியர் நகரில் முழுக்க முழுக்க வீட்டின் முன் அழகிய பூஞ்செடிகளும் வீட்டின் பின்னே காய்கறித் தோட்டங்களும் அமைக்கப்பட்டிருக்கும். நகரை விட்டு மிகவும் ( நகர் நீங்கு படலம்) தொலைவில் இருக்கும் எங்களின் அந்தப் பகுதிக்கு காய்கறிகாரர் வரவே மாட்டார் என்பதால் பொதுவாக அனைத்து வீடுகளும் இதனைக் கடைபிடித்திருந்தோம்.
அங்கேயும் ஒரு தாவர வில்லன் வந்து இந்தக் காய்கறிகள் 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் சீச்சீனு கிடைக்குது. அதுக்கு பதிலா கடனோ உடனோ வாங்கி ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டு விட்டால் அந்தப் பணத்தில் கொள்ளைக் காய்கறி வாங்கலாம் என்று ஒருவர் திருவாய் மலர்ந்தருளா அங்கும் அரங்கெற்றப்பட்டது. இல்லை அழிக்கப் பட்டது காய்கறித் தோட்டங்கள்.
மாடி மேலே மாடி கட்டிக்கொண்டே போய் மாடிகள் இருக்கிறது . ஆனால் தோட்டங்களும் இல்லை. ஆரோக்கியமான சூழலும் இல்லை. முன்பெல்லாம் ஜன்னலை த்திறந்தால் பக்கத்து வீட்டின் முல்லைப் பூவும் எங்கள் வீட்டின் மல்லிகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வாசத்தைக் கொண்டு வரும். கோடைகாலங்களில் கூட மின்விசிறி பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதில்லை
ஆனால் இப்போது கதவைத் திறந்தால் காற்று வரவில்லை. கொசு தான் வருகிறது. பூக்களின் வாசம் போய் செப்டிக் டேங்க் வாடை தான் வருகிறது
வடக்குப் பக்கம் உள்ள வீட்டில் மோட்டார் போட்டால், தெற்கே உள்ளவர்கள் அவர்கள் அணைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இப்போது ஏதோ ஒரு ஜோதிகா படத்தைப் பார்த்து விட்டு மாடியில் தோட்டம் போட்டிருக்கிறார்களாம். ( நல்ல வேளை அவ்வப்போது இப்படியான நற்பணிகளையும் திரைப்படங்கள் செய்கின்றன போலும்)
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். மரங்களை நட்டவர்கள் அதன் கீழ் ஒரு தெய்வங்களையும் சொன்னதின் காரணம் அவர்கள் மரங்களை வெட்டாமல் இருக்க வேண்டும் என்று தான் என்று..
மற்றொரு வீட்டில் தென்மேற்கில் மல்லிகை இருக்கக் கூடாது அங்கே பணம் வைக்கும் அரை இருக்க வேண்டும். என்று சொல்ல அது வெட்டப்பட்டு அறையானது. அப்புறமும் பணம் வரவில்லை. ( உழைக்காமல் பணம் வராது என்று அவர்கள் நினைக்கவே இல்லை.)
அங்கேயே நொந்து போன நான் இங்கே மாடியின் கீழ்ப்பகுதியில் கூட ஒரு கடை கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது.
மிக மிக ஆசையாய் ஒரே ஒரு ரோஜாச் செடி வாங்கி இப்பொது இருக்கும் அப்பார்ட்மெண்டில் வைக்க ,போக வர இடைஞ்சலாக இருக்கு என்றும் செடிகள் வைப்பது பட்டிக்காட்டுத்தனம் என்றும் மிக மிகக் கொடூரமாக எள்ளி நகையாடிவிட்டுப் போனாள் கீழ் வீட்டில் இருக்கும் பெண்.
ஏதாவது கோயிலில் பூசாரிகள் சாமியாடி எனக்கு நிறைய செடி நடுங்க என்று சொன்னால் தேவலாம் போல் இருக்கிறது. ( அந்தக் காலத்தில் முளைப்பாரி என்று ஒரு நடைமுரை உண்டு..அது செழித்து வளர அவ்வளவு பாடுபடுவோம்) இங்கே சாமி எல்லாம் நல்லாத் தான் கும்புடுறாங்க. ஆனால் ஏனோ எல்லோரும் செடி வெறுப்பாளர்களாய் இருக்கிறார்கள்.
கோழியிலும் ஆட்டு இறைச்சியிலும் தான் அதிகமான சத்து இருக்கிறது என்பது அவர்களின் வாதம். ( அக்காலத்தில் நாட்டுக் கோழிகள் சரி. இக்காலத்தில் ஊசி போட்டு வளர்க்கும் கோழிகளிலுமா என்று என்னால் ஏனோ கேட்கவே முடியவில்லை)
பக்கத்தில் உள்ள கடையில் ஞாயிறு அன்று காய்கறிகளே கிடைப்பதில்லை. எல்லோரும் அசைவம் தான் சாப்பிடுவார்களாம். எனக்கு மட்டும் ஏதோ காய்ந்த கத்திரி, மங்கிய கேரட்டுகள் தருவார். உங்களுக்காகத் தான் வைத்திருந்தேன் என்ற அங்கலாய்ப்பு வேறு.
மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு நிறைய அசைவம் சாப்பிட்டு விட்டு இதனைச் சாப்பிடுங்கள் என்றா சொல்வார்? இட்லி அல்லது கஞ்சி சாப்பிட்டு விட்டு மருந்துகள் உட்கொள்ளுங்கள் என்று தானே சொல்வார்.என்று சொல்லிவிட்டு வந்தேன்.
எங்கோ ஒரு இடத்தில் ஆடுகள் கோழிகள் வெட்டப்படும் போது அவை பய உணர்வால் தவிக்கின்றன. அப்போது டாக்ஸின் என்ற நோய் பரவவும் வாய்ப்பு இருக்கிறதாம் என்றேன். போங்கம்மா...நீங்கள் பிறப்பிலேயே சைவம் அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி சிரிக்கிறார்கள்..( தாவர உணவைப் பற்றி யாரும் பெரிய நடிகர்கள் சொன்னால் ஏற்பார்களோ)
நினைத்த நேரத்தில் மருதாணி பறித்து அரைத்து வைத்ததும்,அடுப்பில் கடுகைப் போட்டு விட்டு கொல்லையில் கறிவேப்பிலை பறித்துத் தாளித்ததும்,எலுமிச்சைகளையும், முருங்கைக்காய்களையும் ,மாங்காய்களையும்,நண்பர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்ததும், ஏதோ முன் ஜென்மத்தில் நடந்தது போலவே இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteஅது ஒரு காலம் என்று மனதை தேற்ற வேண்டியதுதான்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்மைச் சுற்றியும் நடக்கும் அறியாமை குறித்த ஆதங்கத்தை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். வெற்றிபெற வாழ்த்துகள் சுவாதி.
ReplyDelete